Thursday, August 14, 2008

சகோதரி கலாவுக்காக ஒரு பிரார்த்தனை

எனக்குத் தெரிந்த தோழியொருத்தி திருமதி.கலா கைலாசபதி
அவளின் கணவர் பொறியியல் துறைப் பேராசிரியர்.
வயது 36 ஆகும் அவள் நல்ல குடும்பத்தலைவி மட்டுமல்ல ஒரு பையனுக்கும் அன்னை.
மிகுந்த, சற்று அதிகமாகவே கடவுள் பக்தி கொண்ட அவள் எந்த பூசை,புனஸ்காரத்தையும் விடாமல் கைப்பிடித்து வருவதோடு அடிக்கடி விரதம் இருந்து உடலையும் வருத்திக் கொள்பவள்.
அவள் பத்து நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைய உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டாள்.
தற்போது மயக்கம் தெளியாமல் கோமா நிலையில் இருப்பதோடு ஒரு பக்கமாக கைகால்களும் செயலிழந்து விட்டன.
பரிசோதித்த மருத்துவர்கள் மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று பழுதடைந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, உடனடியாக இரண்டு அறுவைச் சிகைச்சைகளையும் செய்துள்ளனர்.
நரம்பு பழுதடைந்து இந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் தெரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மிக லேசாக கணவிழித்துப் பார்த்தவள் தன் கணவரைப் பார்த்து கண்கலங்கியிருக்கிறாள்.ஆனாலும் இன்னும் மயக்கம் தெளியாத நிலையிலேயே இருக்கிறாள்.

மிக லேசாக கை,கால்களில் அசைவு இருந்தாலும் டாக்டர்கள் ஏதும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் உள்ளனர்.
அவள் பரிபூரண குணமடைந்து உடல் நலத்தோடு மீண்டுவர உங்களையும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இந்த பதிவு படிக்கும் நண்பர்கள் ஓரே ஒரு நிமிடம் அந்தப் பெண் குணமடைய வேண்டும் என நினைத்தாலே போதும்.
ஆத்மார்த்தமான நெஞ்சங்களின் வாழ்த்தும் ஆசிகளும் அவளைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Friday, November 16, 2007

கார்த்திக் குணமடைந்து வருகிறான்

அன்பான வலைப் பதிவு நண்பர்களே!!!!

மீண்டும் மீண்டும் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையை உணர்கிறேன்.

சில தினங்களுக்கு முன் கார்த்திக் என்ற இளைஞன் மருத்துவ ஆலோசனையின்றி அபாயகரமான மாத்திரைகளை உட்கொண்டதால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானதையும் அவனுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டிருந்தேன்.

அவன் தற்சமயம் மருந்துகளின் விளைவால் ஏற்பட்ட உபாதைகளிலிருந்து மீண்டு சிறுநீரகம் செயல்படத் தொடங்கி விட்டதாகவும் நன்கு குணமடைந்து வருவதாகவும் நண்பர் மூலம் அறிந்தேன்.

அவானுக்காக பிரார்த்தித்த அனைத்து அன்பான இதயங்களுக்கும் நன்றி.
நன்றி.............நன்றி.

குறிப்பு:

பதிவர் அனுராதா அம்மாவுக்காகவும் பதிவிட்டிருந்தேன்.அவர்களும் குணமடைந்து வருவதாக
நன்றி பதிவிட்டிருந்தார்.

நண்பர்கள், உறவினர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ய விரும்பும் பதிவர்களுக்கு இந்த 'பிரார்த்தனை நேரம்' பதிவு திறந்து விடப் படுகிறது.
விருப்பப்படும் நண்பர்கள் மெயில் முகவரி தந்தால் இணைப்பு கொடுக்கப் படும்.

Monday, November 12, 2007

கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம்

இன்றைய தினத்தின் என்னுடைய இரண்டாவது பிராத்தனையிது.

எங்கள் நண்பர் திரு இராமச்சந்திரன் திருமதி.உஷா இராமச்சந்திரன் அவர்களின் புதல்வர் திரு.கார்த்திக்.
இவர் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு.31 வயதே ஆன இளைஞர்.

சில தினங்களுக்கு முன்பு ஜுரம் உடல்வலி என்ற காரணங்களுக்காக தடை செய்யப் பட்ட மருந்தான நிமோசில்லின் [சரிதானே] வகையைச் சேர்ந்த மாத்திரைகளை
[மருத்துவ ஆலோசையின் பேரிலா இல்லையா என்பது தெரிய வில்லை]உட்கொண்டிருக்கிறார்.

அதிலும் ஓவர் டோஸாக இரண்டே தினங்களில் சுமார் பத்து பன்னிரெண்டு மாத்திரைகள் வரைஎடுத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.

அதன் விளைவாக சில தினங்களாக சரிவர சிறுநீர் பிரியாமல் வேதனைப் பட்டு மிகவும் அபாயகரமான கட்டத்தில் பெங்களூருவில் இருந்து அழைத்து வரப் பட்டு தற்சமயம் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய கல்லீரலும் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்னமும் நீர் பிரியாமல் உணவும் உட்கொள்ளமுடியாத நிலையில் உள்ளார்.ஒரு நாளைக்கு 30 மி.லி அளவு தண்ணீர் மட்டுமே பருக வேண்டிய நிலைமை.தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப் பட்டு வருகிறது.

அந்த இளைஞர் குணமடைந்து வர நண்பர்களின் பிரார்த்தனைகள் உதவட்டும்.

அனுராதா அம்மாவுக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை

நம் சக வலைப் பதிவர் அனுராதா அவர்கள் கேன்சர் நோயுடன் போராடி மீண்டு வந்தவர்.

தன்னுடைய வலிகளையும் வேதனையையும் எழுத்தாக்கி வீழிப்புணர்ச்சி பதிவுகள் இட்டு வருகிறார்.
கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

இன்று மீண்டும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டு வாடும்போதும் தன் அருமைக் கணவருடைய உதவியுடன் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் தற்போதைய உடல் வேதனைகளில் இருந்து மீண்டு நலம் பெற்று குணமடைய பதிவர்கள் நம் பிரார்த்தனை நிச்சயம் உதவும்.

அவருக்காக நாம் ஒவ்வொருவரும் நம் இடத்திலிருந்தபடியே பிரார்த்திப்போம்

அவர் பதிவிலும் சென்று நம் நம்பிக்கையை பின்னூட்டமாக பதிவு செய்வோம் வாருங்கள்.

பிரார்த்தனை என்பது கடவுள் வழிபாடு மட்டுமல்ல.அவர் நலமடைய வேண்டும் என்ற ஆத்மார்த்த எண்ணமே கோடிப் பிரார்த்தனைகளுக்குச் சமம்.

அம்மா அனுராதா பூரண குணமடையட்டும்.

Wednesday, March 14, 2007

மீண்டும் ஒரு மீள்பதிவு.

அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு
என்னுடைய இந்த பிரார்த்தனை நேரம் பதிவின் முதல் நபரான
எங்கள் குடும்ப நண்பர் திரு&திருமதி சங்கர்[சின்சினாட்டி]அவர்களின் அன்பு மகன் 18 வயதே நிரம்பிய இளைஞன்
வெங்கட் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவன் இன்று மிக நன்றாக குணமடைந்து வருவதாக நண்பர் மூலம் அறிந்தேன்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சைப் பெற்றுவருகிறான்.
இருப்பினும் மருந்துகளின் தாக்கம் அவனுடைய முன்னேற்றத்தில் அடிக்கடி தொய்வை ஏற்படுத்தி கவலை அளிக்கிறது.
அவன் முற்றுலும் குணமடைய அன்பான உள்ளங்கள் பலர் பிரார்த்தித்தனர்.
இதுவரை இப்பதிவு படிக்காதவர்களும் அவனுக்காக வேண்டவே இந்த மீள்பதிவு
நன்றியுடன் கௌசி

Monday, January 29, 2007

வெங்கட் குணமடைந்து வருகிறான்....அன்பான உள்ளங்களின் பிரார்த்தனைக்கு நன்றி...நன்றி.

அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு
என்னுடைய இந்த பிரார்த்தனை நேரம் பதிவின் முதல் நபரான
எங்கள் குடும்ப நண்பர் திரு&திருமதி சங்கர்[சின்சினாட்டி]அவர்களின் அன்பு மகன் 18 வயதே நிரம்பிய இளைஞன்
வெங்கட் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவன் இன்று மிக நன்றாக குணமடைந்து வருவதாக நண்பர் மூலம்
அறிந்தேன்.நடக்கவும்,ஓடவும்,பார்க்கவும்,
பேசவும் என நல்ல முறையில் தேறிவருகிறான்.
ஞாபக சக்தி மட்டும் சற்று குறைவாக உள்ளது.
அவன் பரிபூரண குணமடைந்து நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் சுகம் பெறுவான் என்ற நம்பிக்கையுடன்,
அவனுக்காக பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
பின்னூட்டம் இட்டும்,இடாவிட்டாலும் இந்த பதிவைப் பார்த்து
அவனுக்காக வேண்டிய அத்துனை நல்ல உள்ளங்களையும் வணங்குகிறேன்
நன்றி.....நன்றி.......நன்றி

Sunday, January 28, 2007

ஒரு மீள்பதிவு


இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.
இடம்: சின்சினாட்டி,அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்தான்.